தருமபுரி:அரூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “வாச்சாத்தி மக்களுக்கு நியாயம் கேட்டு 30 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மலைவாழ் மக்கள் சங்கமும் தொடர் சட்ட போராட்டம் நடத்தி, வாச்சாத்தி மக்களுக்கு வரலாற்று தீர்ப்பை பெற்றுத் தந்தது.
வாச்சாத்தி மக்களுக்கு தீர்ப்பு கிடைத்தும், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை. அதிமுக அரசு குற்றவாளிகளை பாதுகாத்ததே தவிர, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வரைச் சந்தித்து, வாச்சாத்தி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள் நிறைவேற்றி தருமாறும், வாச்சாத்தி கிராம மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யுமாறும் வலியுறுத்தினோம். தமிழக முதல்வரும் அக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். இவர் மக்களுக்காக பாதயாத்திரை நடத்தவில்லை, மக்களிடையே மத மோதலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார். சென்னிமலையில் பாதயாத்திரைக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்தவ மக்களுக்கும், இந்துக்களுக்கும் மத மோதல் ஏற்படுத்த இன்று பாஜக போராட்டம் நடத்தியுள்ளது. இதன் பின்னால் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது.