தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த தம்பதி ரமேஷ்-ஸ்ரீதேவி. ரமேஷ் சென்னையில் பணிபுரிவதால், ஸ்ரீதேவி குழந்தைகளுடன் தனது வீட்டில் வசித்து வருகிறார். ஸ்ரீதேவி, திருவிக நகரில் உள்ள தாய் வீட்டிற்குப் பகல் நேரங்களில் அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டைப் பூட்டி விட்டு குழந்தைகளுடன் இன்று (டிசம்பர்-12) வெளியில் சென்றுள்ளார்.
அரூரில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - Robbers break into house
தர்மபுரி: அரூர் அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதனையறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். தொடர்ந்து மாலை ஸ்ரீதேவியை பார்ப்பதற்காக வீட்டிற்குச் சென்ற அவரது சகோதரர் சுரேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். இதுகுறித்து ஸ்ரீதேவிக்கு தகவல் தெரிவித்தார்.
பீரோவிலிருந்து செயின், வளையல், தோடு, கொலுசு என ஏழரை சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் ஸ்ரீதேவி புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஆய்வு செய்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலிலே பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.