தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் செம்மரம் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், சுமார் 2 ஏக்கரில் செம்மரம் வளர்த்து வருகிறேன். செம்மரங்களை தனியாரும் வளர்க்கலாம் என 2002ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் பிறகு, 2012ஆம் ஆண்டு திருச்சி துறையூர் விவசாய பயிர் வளர்ப்பு துறையின் உதவியுடன் ஆந்திராவில் விளையும் செம்மர வகையைச் சார்ந்த 800 மரக்கன்றுகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து பயிரிட்டேன். செம்மரங்களை பயிரிட்டு ஏழாண்டுகள் ஆகிறது. மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இன்னும் எட்டாண்டுகளில் மரம் வெட்டும் பருவத்திற்கு வந்துவிடும்.