தருமபுரி: அரூர் அடுத்த சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி என்பவர், அருகில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கிரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், நேற்று (அக்.10) மீண்டும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து உள்ளார். அப்பொழுது, மருத்துவர் சிகிச்சை அளிக்காமல், அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரூர் அரசு மருத்துவமனையில் கிரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பிய நிலையில், மீண்டும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது தனியார் மருத்துவமனை மருத்துவர் முரளிதரன், சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றும், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் இளைஞர் உயிரிழந்து விட்டார் எனக் கூறி, கிரியின் உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர் முரளிதரன் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
பின்னர் இதனை அறிந்த காவல் துறையினர் மற்றும் அரூர் வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.