பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியா் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை, பாமக போட்டியிடும் தருமபுரி மற்றும் பென்னாகரம் தொகுதிகளில் திமுகவிற்கு ஆதரவாக இன்று தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், ”வன்னிய மக்களுக்காக ரத்தம் சிந்தி உழைத்த எனது தந்தை உடல்நலிவுற்றவுடன், உயர் சிகிச்சை வழங்க கோரிக்கை விடுத்த போது, தன்னிடம் பணமில்லை என்றும், தென்னை மரத்தில் இருந்து வரும் தேங்காயை விற்று தான் பிழைப்பு நடத்துவதாகவும் கூறி மறுத்துவிட்டார் ராமதாஸ்.
எனது தந்தை மருத்துவமனையிலிருந்த போது எங்களைக் கூட பார்க்க விடவில்லை. 48 நாட்கள் மயக்கத்திலேயே வைத்திருந்து மருத்துவக்கொலை செய்துவிட்டனர். வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று உயர் சிகிச்சை வழங்க கேட்டபோது, என் அப்பாவிடம் பாஸ்போர்ட் இல்லை என பொய்யான காரணத்தை ராமதாஸ் கூறினார். அப்பா இறந்த பிறகும் எங்களை வந்து அவர் பார்க்கவோ, ஆறுதல் கூறவோயில்லை. ராமதாஸின் நோக்கம் அவரது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், அவர் மகன் வளமாக இருக்க வேண்டும் என்பதுதான். இந்த சமுதாயத்திற்காக உழைத்தவர்கள் பற்றிய கவலை அவருக்கில்லை.