தருமபுரி: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது, வனப்பகுதியை ஒட்டிய கிராம பகுதிகளுக்குள் யானை, மான், சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து பயிர்களையும் கால்நடைகளையும் சேதப்படுத்துவது வழக்கம். அவ்வாறு வரும் விலங்குகளைப் பாதுகாப்பாக வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து வருகின்றனர்.
மாரண்டஹள்ளி அடுத்த மலைப்பகுதியை ஒட்டி சாமனூர், படகாண்டஹள்ளி, கொக்கிகல் மலைப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் விவசாயம் செய்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மர்ம விலங்கு நாய், கோழி, ஆடு போன்ற வளர்ப்புப் பிராணிகளை கொன்று வருவதாக பேசப்படுகிறது. திடீரென மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்தை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனையடுத்து அதனை உற்றுப் பார்த்தபோது, அது 'சிறுத்தை' என தெரியவந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து பாலக்கோடு வனத்துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதும் செல்போனில் பதிவான காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளனர். இதில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சாமனூர், படகாண்டஹள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் இன்று (நவ.1) விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.