தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் செல்லமுடி பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் பிரச்னை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாகவும் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும் என நேற்று (ஆகஸ்ட் 15) முதல் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 16) சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் பிரச்னை; 2ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் - தருமபுரி பென்னாகரம்
தருமபுரி: குடிநீர் வசதி செய்து தரக்கோரி செல்லமுடி கிராம மக்கள் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஊராட்சியின் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்க அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அலுவலர்கள் உள்ளனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக நேற்று (ஆகஸ்ட் 15) ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் தலையீட்டின் காரணமாக ஆழ்துளை கிணறு அமைக்க முடியாமல் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
இதையடுத்து, கிராம மக்கள் இன்று (ஆகஸ்ட் 16) இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பென்னாகரம் வட்டாச்சியா் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஏரியூர் காவல்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.