குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திமுக, சமூக நல்லிணக்க மேடை அமைப்பைச் சார்ந்தவர்கள் தருமபுரி வேல் பால் பணிமனையிலிருந்து நான்கு சாலை வழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பேரணியாக வந்தடைந்தனர்.
இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். மேலும் அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற பேரணி இதைத் தொடர்ந்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய, கிறிஸ்தவ உள்ளிட்ட அமைப்பைச் சார்ந்தவர்களும் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் .