தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இதனிடையே இவரது தம்பி விமலுக்கும், இவருக்கும் சொத்து பிரிப்பதில் நான்கு மாதங்களாக பிரச்னை இருந்துவந்துள்ளது. இதனால் வெடிகுண்டு வைத்து கொலை செய்துவிடுவதாக விமல் மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு பெட்ரோல் நிரப்பிய நெகிழி கவரை சொக்கலிங்கம் மீது வீசி நெருப்பு வைத்து கொல்ல முயன்றதாகவும், பொதுமக்கள் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பிலும் மாட்லாம்பட்டியில் விரைவில் குண்டுவெடிப்பு நிகழ உள்ளது என சொக்கலிங்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டியுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு 12.30 மணியளவில் சொக்கலிங்கம் புதிதாக கட்டிய வீட்டில் ஜன்னல் வழியாக அடையாளம் தெரியாத கும்பலுடன் வந்து விமல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.
இதில் ஒரு வெடிகுண்டு மட்டும் வெடித்ததில், வீடு சேதமடைந்தது. சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு ஊர் மக்கள் வந்தபோது, அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியது.
இதையடுத்து சொக்கலிங்கம் உடனடியாக காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்டபோது வெடிக்காத நிலையில் இருந்த மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி, தலைமறைவாக உள்ள விமலை தீவிரமாக தேடிவருகின்றனர். ஊருக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.