தருமபுரி:பென்னாகரம் அடுத்த ஏரியூர் செல்லும் பகுதியில் சந்தைப்பேட்டைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் வனப்பகுதிக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சல், அடுப்புக்குத் தேவையான விறகு எடுக்கச் செல்வது வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை சந்தைப்பேட்டை கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
அப்போது வனப்பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆடை ஏதுவுமின்றி நிர்வாணமாகத் தலை சிதைந்தும், மர்ம உறுப்பு அறுக்கப்பட்டும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக ஏரியூர் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ், பென்னாகரம் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் ஆகியோரும் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.