தருமபுரி:கம்பைநல்லூர் பேரூராட்சியில் 2022 - 2023ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 13 லட்சம் மதிப்பிலான இரண்டு உயர் மின் கோபுர விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார்.
ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டம் செயல்படுத்த வேண்டும்: இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, “கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக ஆட்சியில் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒகேனக்கல் காவிரி உபரிநீா் திட்டத்தை செயல்படுத்த பல முறை வலியுறுத்தினர். நான் முதலமைச்சரை சந்தித்து மூன்று முறை கேட்டு இருக்கிறேன். மழைக்காலங்களில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தி மூன்று டிஎம்சி தண்ணீரை நீரேற்றம் மூலம் நிரப்பினால் புளோரோசிஸ் நச்சு பொருள் நீரிலிருந்து நீக்கப்படும்.
தமிழ்நாட்டில் தரமற்ற நெடுஞ்சாலைகள்: வேலைவாய்ப்பு உருவாகும். பொருளாதார மேம்படும். வெளி மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்ற இளைஞர்கள் மீண்டும் வருவார்கள். திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஏன் மெத்தனமாக இருக்கிறது என்று புரியவில்லை. முதலமைச்சர் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட்டில் தொழிற்சாலைகளை வரவைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சில நெடுஞ்சாலைகள் இன்னும் தரமாக இல்லை.
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் தரமற்ற நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது. வந்தவாசி நெடுஞ்சாலை உலக வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. சில பகுதியில் தரமாகவும் சில பகுதிகளில் தரம் இல்லாமல் இருக்கிறது. தரம் இல்லாத தார் பயன்படுத்தப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் சாலைக்கு கீழ் தல சாலை (underpass road) அதிகமாக அமைக்க வேண்டும். இன்று காலையில் ஒரு விபத்து நடைபெற்றது.