தருமபுரி:கடத்தூரில் பாமக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று (செப்.10) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கலந்துரையாடினார்.
மேலும், இந்த கூட்டத்திற்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காவிரியில் ஆண்டுதோறும் 100 டி.எம்.சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இதனை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்ப, காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதை பற்றி அரசு பேசாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால், 5 இலட்சம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். சிப்காட்டில் அதிக நிறுவனங்கள் வரவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குளிர்பதன கிடங்கு இல்லை. தக்காளி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது விலை குறைந்து வருகிறது.
தக்காளி குளிர்பதன கிடங்கு இருந்தால், தக்காளி விலை உயர்ந்திருக்காது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது. காவிரி ஆணையம், நீதிமன்றம் இருக்கு; ஆனாலும் நமக்கு தண்ணீர் வரவில்லை. இன்றைய தேதியில் நமக்கு 60 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும். இருப்பினும் நாம் 30 டி.எம்.சி தான் கேட்கிறோம். டெல்டா மாவட்டங்களில் குறுவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது.
கர்நாடக அரசின் பிடிவாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் அணைகளின் நிர்வாகத்தை காவிரி ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு சரியான தண்ணீர் கிடைக்கும். கர்நாடக முதலமைச்சரை, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். நமக்கு குடிநீருக்கான தண்ணீர் தேவை இருக்கிறது.