"இலவச திட்டங்கள் வேண்டாம்.. நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றுங்கள்.." - தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தருமபுரி: காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று (டிச.18) போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது "தருமபுரி மாவட்டத்தில் உள்ள 18 லட்சம் மக்களும் பயன்பெறும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவித்துச் செயல்படுத்த வேண்டும்.
வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உபரியாகச் செல்லும் மூன்று டிஎம்சி தண்ணீரைத் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர் நீர்நிலைகளை நிரப்பும் வகையில் இந்த உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இலவசத் திட்டங்களை விடுத்து இது போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தினால், மக்களின் வாழ்வாதாரம் உயரும். காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் தருமபுரி மாவட்டம் வழியாகச் சென்றாலும், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பயன் அளிக்கவில்லை.
இதன் காரணமாக அரசு உபரி நீர் திட்டங்களைச் செயல்படுத்தி, இங்குள்ள விவசாயத்தை வளம்பெறச் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மட்டும் ஒகேனக்கல் வழியாக சுமார் 600 டிஎம்சி காவிரி உபரி நீர் கடலில் வீணாகக் கலந்துள்ளது. இதில் மூன்று டிஎம்சி தண்ணீரைக் கொண்டு காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 80 சதவீத மக்கள் பயன் பெறுவார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 83 பெரிய ஏரிகள், 700 சிறு ஏரிகள், 1500 நீர் நிலைகள் இதன் மூலம் நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் போதிய தொழில் வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் இல்லாத காரணத்தால் சுமார் 5ஆயிரம் பேர் வெளி மாநிலங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு விவசாய நிலங்கள் தருமபுரி மாவட்டத்திலிருந்தும், போதிய தண்ணீர் வசதியின்றி பிழைப்பிற்காக வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல்படுத்துவதால் இங்கு விவசாயப் பணிகள் மேம்பட்டு, வெளி மாநிலங்களில் கூலி வேலைக்குச் சென்றுள்ளவர்கள் மீண்டும் சொந்த மாவட்டத்திற்குத் திரும்பும் நிலை ஏற்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஏழு முறை கோரிக்கை வைத்தும் அவர் இந்தத் திட்டத்தை நிறைவேற்றவில்லை.
தற்போதைய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் இந்த கோரிக்கை நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது. வெற்றி பெற்ற பின் எந்த திட்டத்தையும் நிறைவேற்றுவதில்லை. தருமபுரி மொரப்பூர் ரயில் பாதை அமைக்கும் திட்டம் 73 ஆண்டு கனவுத் திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றக் கோரி 19 முறை மத்திய அமைச்சர்களைச் சந்தித்துள்ளேன்.
இந்தத் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நிறைவேற்றப்படும். தொப்பூர் கணவாய் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களால் அதிகளவில் உயிரிழப்புகள் நடைபெற்று வந்தது. அங்குச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், தற்போது மத்திய அரசு 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது வரவேற்புக்குரியது" என்றார். இந்தப் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:“வெள்ள நிவாரணத்தில் அரசுக்கு துணை நிற்போம்” - அண்ணாமலை உறுதி!