தருமபுரி நகர்ப்பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தருமபுரி நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையிலான நகராட்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில், குடோன்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் இந்தச் சோதனையில் நரசிம்மன், குலாப் என்பவருக்குச் சொந்தமான மூன்று குடோன்களில் சுமார் மூன்று டன் எடையுள்ள நெகிழிகள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை நகராட்சி பணியாளர்கள் கைப்பற்றினர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று பகுதிகளில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இக்கடைகளில் இருந்து சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள நெகிழிப் பொருட்கள், மூன்று டன் எடையுள்ள நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடை உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடை விற்பனையாளர்கள் தொடர்ந்து நெகிழியை விற்பனை செய்து வந்தால் அவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தருமபுரி நகராட்சியில் நான்கு மாதத்தில் 10 டன் மதிப்பிலான நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.