தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட ஏரியூர் மூங்கில்மடுவு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தில் உள்ள மின்சார மின்மாற்றி, கடந்த 10 தினங்களுக்கு முன்பு, உயர் மின் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. இதனால் அக்கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வந்தனர்.
எனவே, அவர்கள் ஏரியூர் மின் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், மின் ஊழியர்கள் மின்மாற்றியை மாற்றித்தர ரூபாய் 5 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளனர். எனவே, அவர்கள் ஊர்ப்பொதுமக்களிடம் ரூபாய் 5 ஆயிரத்தை வசூல் செய்து, மின்சார வாரியப் பணியாளர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளனா்.
பின்னர் மின்வாரிய அலுவலர்கள் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு மின்மாற்றியை மாற்றியுள்ளனர். ஆனால், மாற்றப்பட்ட மின்மாற்றியும் மீண்டும் பழுதடைந்தது என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், மின்சார வாரிய அலுவலர்கள் மீண்டும் மின்மாற்றியை மாற்றி அமைக்க ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும் என கேட்பதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே மின்மாற்றி மாற்றித் தரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.