தருமபுரி தொப்பையாறு அணை சாலை சேதம்: 2 மாதங்களாக அவதிப்படும் மக்கள்! தருமபுரி: தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை மற்றும் முத்தம்பட்டி வனப்பகுதியில் பெய்யும் மழைநீரானது ஓடைகளின் வழியாக கடந்த 2 மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது தொடர் நீர்வரத்து காரணமாக அணை முழு கொள்ளளவு எட்டி நிரம்பியது.
தொப்பூரிலிருந்து பொம்மிடி பகுதிக்கு தொப்பையாறு அணையை ஒட்டி தார்சாலை செல்கிறது. இந்த சாலையில் பேருந்துகள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என தினமும் அதிக அளவில் பயணிக்கும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருந்ததாலும், அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதாலும் அணையின் தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நிற்கிறது.
இதனால் அணையை ஒட்டி உள்ள சாலையின் பக்கவாட்டு சுவர்கள் மண் அரிப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களுங்கு முன்பு தொப்பூர் - பொம்மிடி சாலை ஒரு பகுதி உடைந்து தண்ணீரில் சரிந்து மூழ்கியது. ஆகையால் உடைந்த சாலையில் வாகனங்கள் சிக்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. 2 மாதங்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாததால் அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தவித்து வருகின்றனர். பாதையை சரி செய்து, போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி: சிறுத்தையா என அச்சத்தில் மக்கள்!