பேருந்து வசதி கோரி பொதுமக்களுடன் மறியலில் ஈடுபட்ட பாமக அதிமுக எம்எல்ஏக்கள் தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டிமரத்துபட்டி அருகே த.குளியனூர், உத்தனூர், பருத்திநத்தம், சந்தனூர் கிராம மக்கள் இணைந்து, தங்கள் கிராமத்திற்குப் பேருந்து வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பொதுமக்களுக்கு ஆதரவாக பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பொதுமக்களுக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டார்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் தொடர்ந்தது. இதனை அறிந்த தர்மபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் சாலை மறியல் நடக்கும் இடத்திற்கு வந்தார்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் இணைந்து அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பேசிய தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் "சாலை அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் பஸ் வசதி இல்லாத இப்பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று, சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதிகாரிகளுக்குக் கடிதம் வழங்கியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடிதத்திற்குக் கூட மரியாதை இல்லையா” என போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, ”பொதுமக்கள் ’பேருந்து காணவில்லை’ என்று, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் இன்று சாலை மறியல் நடைபெறும் என்று தெரிவித்தும், அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இப்பகுதியில் அரசு பேருந்து இயக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
தர்மபுரி வட்டாட்சியர் ராஜராஜன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஊர் பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்று, பின்பு தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:'பணி பாதுகாப்பு வழங்குக' - டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்ஆர்பி செவிலியர்கள்!