தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஜி.கே.மணி - ஏன் தெரியுமா?

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் அமையவுள்ள இடங்களில் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

ஒகேனக்கல்கூட்டுக் குடிநீர்  இரண்டாம் கட்ட பணிகள்  பென்னாகரம்
ஒகேனக்கல்கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட பணிகள் பென்னாகரம்

By

Published : Jan 28, 2022, 9:41 PM IST

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் திட்ட வடிகால் வாரியத்தின் சார்பில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீா் இரண்டாம் கட்டப் பணிகள் அமைய உள்ள இடங்களில் பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே. மணி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தர்மபுரி மாவட்ட மக்கள் புளோரைடு கலந்த குடிநீரை குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசியபோது அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி ஏற்றுக்கொண்டு, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இத்திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என சட்டப்பேரவையில் கூறியபொழுது தமிழ்நாடு முதலமைச்சர் துறைக்கான அமைச்சர் கே.என்.நேரு மற்றும் துரைமுருகன் ஆகியோரை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தார்.

ஒகேனக்கல்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ ஜி.கே.மணி

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து ஆய்வு செய்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்காக 4,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டம் அனைவராலும் வரவேற்கக்கூடிய வரலாற்றுத் திட்டம். இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ஒகேனக்கல் முதலைப் பண்ணை, யானை பள்ளம், கணவாய்ப் பகுதி உள்ளிட்டப் பகுதிகளில் நீரேற்று நிலையம், பென்னாகரம் அருகே உள்ள பகுதியில் 40 ஏக்கர் பரப்பளவில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

முதற்கட்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 163 குதிரைத்திறன் கொண்ட நான்கு மின் மோட்டார்களின் மூலம் நாளொன்றுக்கு 160 எம்எல்டி நீர் எடுக்கப்பட்டு வந்தது.

ஜி.கே.மணி ஆய்வு

தற்போது அமையவுள்ள இரண்டாம் கட்ட குடிநீர் திட்டப்பணிகளில் அதேதிறன் கொண்ட 10 மோட்டார்கள் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர் விநியோகிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இரண்டாம் கட்ட கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளிலிருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள கிராமங்களில் நபர் ஒன்றுக்கு 55 லிட்டரும், நகரப் பகுதிக்கு 135 லிட்டர் நீரும் விநியோகிக்கப்படும்.

கிராமங்கள்தோறும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தர்மபுரியில் அமைய உள்ள சிப்காட் பணிகளுக்கு நீர் வழங்கத்திட்டமிட்டது போல் பென்னாகரத்தில் அமைய உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளுக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டும்.

இத்திட்டம் நிறைவேற்றும்போது ஆழ்துளைக் கிணறுகளில் புளோரைடு கலந்த நச்சுத்தன்மை கொண்ட நீர் முற்றிலுமாக இல்லாமல் தடுக்கப்படும்.

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நலன் கருதி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொகுதி மக்கள் சார்பாக நன்றி' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:’ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’- நீக்கப்பட்ட டப்பிங் கலைஞர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details