தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்த டிராக்டர் வியாபாரி மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியின் மகன் ஆதித்யா.இன்று (செப்.13) இவர் இரண்டாவது முறையாக இன்று சேலத்தில் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில், நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று (செப்.12) வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மாணவரின் உடலை தருமபுரி நகரக் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை உடற்கூறாய்வு நடைபெற்ற நிலையில், உயிரிழந்த மாணவரின் உடலுக்கு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் பெற்றோர் தங்கள் சம்மதமில்லாமல் உடற்கூறாய்வு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்து, உடற்கூறாய்வு செய்யும் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.