தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியைச் சேர்ந்த மாணவன் ஆதித்யா நீட் தேர்வு ஏற்படுத்திய மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் பெற்றோர் தங்கள் சம்மதமில்லாமல் உடற்கூறாய்வு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டி உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்து, உடற்கூறாய்வு செய்யும் அறை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் இருந்து சுமார் 6 மணிநேரம் காத்திருந்த மாணவரின் உறவினர்களிடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவனின் உடல் பெற்றோரின் சம்மதத்துடன் அவர்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூசாரிபட்டிக்கு ஆம்புலன்ஸ் மூலம் இன்று (செப்.,13) மாலை 4 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.