இன்று நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இம்மலை கிராமத்திற்குச் செல்வதற்கு சாலை வசதி இல்லை. பொதுமக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இன்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தின விழாவை கொண்டாட இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் 10 கிலோமீட்டர் பயணம் செய்து பள்ளிகளில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். இதனால், தாங்கள் வாழும் இடத்திலேயே குடியரசு தினத்தைக் கொண்டாட முடிவு செய்த மலைவாழ் மக்கள் காடுகளில் கிடைத்த மரத்தை வைத்து கொடிக்கம்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இதையடுத்து, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவர் சிவகுமார் செந்தில்முருகனை சந்தித்து, தங்கள் பகுதியில் கொண்டாடப்படும் குடியரசு தினவிழாவில் கொடி ஏற்ற வேண்டும் என அழைத்துள்ளனர். அவரும் அழைப்பை ஏற்று மலை கிராமத்திற்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். அவரோடு மலைக் கிராம மக்களும் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.