தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கிரானைட் கம்பெனியில் மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் தனியார் கிரானைட் கம்பெனியில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்கு, தயாராக இருந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயலால், அந்த மாநில அரசு முற்றிலும் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.
இதனால் மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் யாரையும் அனுப்பி வைக்க வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்களது இல்லங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளா்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தாங்கள் பணியாற்றிய கிரானைட் கம்பெனி முன்பாக வந்து, அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.