கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் வலது, இடதுபுற கால்வாய்கள் மூலம் முதல்போக பாசனத்திற்காக ஜூலை மாத இறுதி வாரத்தில் நீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று (ஜூலை 29) கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 135 நாள்கள் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இன்று (ஜூலை 29) கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் ஆகியோர் மலர்த்தூவி நீரை திறந்துவைத்தனர்.
அணையின் மொத்த நீர்மட்ட அளவு 44.28 அடிகளில், தற்போது 41 அடி நீர் இருப்பு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில் இன்றுமுதல் (ஜூலை 29) டிசம்பர் மாதம் வரை 135 நாள்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு கால்வாய்கள் வழியாக நீர் திறக்கப்படவுள்ளது.
முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள எட்டாயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசனம் பெறும். கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் வலதுபுற கால்வாய் மூலம் இரண்டாயிரத்து 82 ஏக்கரும், இடதுபுற கால்வாயால் ஐந்தாயிரத்து 918 ஏக்கரும் பயனடையும்.
இதையும் படிங்க: பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தை முன்பிருந்தபடியே மாற்றியமைக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!