தர்மபுரி:215 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் இரண்டாவது மெகா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்தியாவிலேயே 56 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாட்டிற்குத் தேவையான கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்.
தற்போது செப்டம்பர் மாதத்திற்கு ஒரு கோடியே நான்கு லட்சம் தடுப்பூசி என்று இலக்கு அறிவிக்கப்பட்டது. அது இன்றோடு செப்டம்பர் மாதத்திற்கான ஒரு கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 10 நாட்களில் ஒன்றிய அரசு நிர்ணயித்த இலக்கை காட்டிலும் கூடுதலான தடுப்பூசிகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்கள் மாணவர்களை அச்சப்படுத்த வேண்டாம்
தமிழ்நாடு முழுவதும் 83 மாணவ, மாணவிகளுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது முதல் நிலை பாதிப்பாகவே இருக்கிறது. இதில் மாணவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை. எனவே மாணவர்களின் தொடர்புடைய பெற்றோர்கள், ஆசிரியர்களை மருத்துவத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் மன அழுத்தம், கல்விச் சுமை இவற்றை கடந்து பள்ளிக்கு வர தொடங்கி உள்ளார்கள். எனவே இதனை பத்திரிகையாளர்கள் பெரிதுபடுத்தி, மாணவர்களையும் பெற்றோர்களையும் அச்சப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது
நாடு முழுவதும் தடுப்பூசி என்பது 18 வயதைத் தாண்டியவர்களுக்கு மட்டும்தான் என உலகம் முழுவதும் இருந்து வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் நிலை இல்லை. அண்மையில் ஒன்றிய அரசின் அமைச்சரை சந்தித்த போது 17 வயதுடைய மாணவர்கள் கல்லூரி சேருகிறார்கள். அவர்களுக்குத் தடுப்பூசி போடலாமா என கேட்டு இருக்கிறோம்.
ஒன்றிய அரசு ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களைக் கேட்டு தகவல் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்த அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டதால் நாளை (செப்.20) தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது. எனவே மக்கள் முகாம்களுக்கு வந்து ஏமாறவேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் ஆர்.வைத்தியநாதன் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க :கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்