தருமபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீதர்(40). இவருக்கும் தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. ஆனால், பத்து ஆண்டுகள் ஆகியும் இருவருக்கும் குழந்தை இல்லை. இதனால், தருமபுரி நகராட்சி பூங்கா அருகே உள்ள ஸ்ரீ அன்னை மருத்துவமனையில் குழந்தையின்மைக்காக மருத்துவர் பிந்துவிடம் அபிராமி சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து, அபிராமி கர்ப்பம் தரித்துள்ளார்.
இந்நிலையில், ஒன்பது மாத கர்ப்பிணியான அபிராமிக்கு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலி ஒருவர் ஊசி போட்டுள்ளார். அந்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே அபிராமிக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனை நிர்வாகம் சாதாரண ஆட்டோவில் அபிராமியை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அரசு மருத்துவமனை கைவிரித்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர், அபிராமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
‘வேறொருவருக்கு இந்த நிலை வரக்கூடாது’ - கணவன் கண்ணீர் இதனையடுத்து, உயிரிழந்த அபிராமியின் கணவர் ஸ்ரீதர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “என் மனைவிக்கு குழந்தை பிறக்க இன்னும் 10 நாட்கள் தான் உள்ளது. 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தற்போது மனைவி கர்ப்பமாகியிருந்தார். இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தவறான சிகிச்சை தான் என் மனைவியின் உயிரிழப்புக்கு காரணம். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது” என கண்ணீர் மல்க வேதனையுடன் கூறியது காண்போர் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
நிறைமாத கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்துவிட்டு நடவடிக்கைக்காக காத்திருக்கும் கணவனின் குரலுக்கு அரசு செவி மடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும் என்றும், காரணமானவர்கள் யார் யாரோ அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் வலுவாக எழுந்து வருகிறது.