தருமபுரி: பஞ்சப்பள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள ஜெல் திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குள்ளப்பன் (60). இவர் நேற்று (நவ.12) பிற்பகல் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, இலைகள் பறிப்பதற்காக அவரது விவசாய நிலத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்திற்குள் குள்ளப்பன் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் இருந்ததைப் பார்த்த குள்ளப்பன், அந்த யானைகளிடம் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது விவசாயி குள்ளப்பனைக் கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடீரென ஆவேசமடைந்து விவசாயி குள்ளப்பனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. யானை தாக்கியதில் நிலைகுலைந்த விவசாயி குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.
அப்போது வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் காயமடைந்திருந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போதிய மருத்துவ வசதியில்லாத காரணத்தால் விவசாயி குள்ளப்பன் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.