தர்மபுரி:தர்மபுரியில் தேசிய தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆணையர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளில் வசித்து வரும் குடியிருப்பாளர்களிடம் குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், மின்சார வசதி, குடியிருப்புகளின் தற்போதைய நிலை உள்ளிட்டப் பல்வேறு விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாமினைப் பார்வையிட்டு முகாமில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளைப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்துக்கு நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் - தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணையர் இதில் தேசிய தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆணையர் வெங்கடேசன் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், வேலை நேரம், ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறதா, இஎஸ்ஐ மருத்துவமனை அட்டை உள்ளதா எனப் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தார்.
நீட் தேர்வைப் போல் தூய்மைப்பணியாளர்கள் பிரச்சனையிலும் தனிக் குழு..!:
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கடேசன், ”தூய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.தற்காலிகப் பணியாளர்கள் குறைவான ஊதியதில் பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு பி.எப் பிடிக்கப்படுகிறது, இ.எஸ்.ஐ., காப்பீடு அட்டை வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனையில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு ஊதியம் மிகக்குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மாநில அளவில், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தேசிய அளவில் உள்ளது போல், தமிழ்நாட்டிலும் துாய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.ஒப்பந்த பணியாளர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால், லாபகரமாக உள்ள இப்பணியை தமிழ்நாடு அரசு, இடைத்தரகர்களுக்கு தராமல், துாய்மைப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது நீட் தேர்வு வேண்டுமா என்பது குறித்து குழு அமைத்துள்ளது போன்று, துாய்மை பணியாளர்களுக்கு உரிய ஊதியம், சலுகைகள் கிடைக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்” என தெரிவித்தார்
இதையும் படிங்க:Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு