தருமபுரி மாவட்டம், அரூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பில்லை, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இதே நிலை நீடிக்கிறது என்றார்.
மேலும் அவர், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை மத்திய அரசு மறைமுக ஆதரவு கொடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள காவிரி உபரி நீர் திட்டத்தை போல் தருமபுரி மாவட்டத்திலும் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி இங்குள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பினால் விவசாயம் செழித்து குடிநீர் பஞ்சம் நீங்கும். டெல்டா பகுதியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்கவும், எண்ணெய் கிணறுகள் அமைக்கவும் அரசு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.இந்த அனுமதியை ரத்து செய்தால்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்ற முடியும்.
செய்தியாளர் சந்திப்பில் அய்யா நல்லகண்ணு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் பாதுகாப்பு இருப்பதாக கூறும் மத்திய அரசிடம் என்ன உத்தரவாதம் இருக்கிறது. அனைத்து மதத்தினருக்கும் சமமான சட்டத்தை இயற்ற வேண்டும். அனைவருக்கும் சமமான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மலைவாழ் சிறுவர்கள் கல்வி பயில உந்துதலாக நிற்கும் ஆசிரியை