தருமபுரி:தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைப் பொது மேலாளர் தமிழ்நாடு பொறுப்பு அலுவலரை, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி செந்தில்குமார், டெல்லியில் சந்தித்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தார்.
இந்தியாவிலேயே அதிகமாக விபத்து நடக்கும் தருமபுரி NH44 அமைந்திருக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவுகளை மக்கள் நலன்கருதி, மறுசீரமைப்புச் செய்திட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வற்புறுத்திவந்த நிலையில் அதற்கான விரிவான திட்ட அறிக்கை, மதிப்பீடுகள் தற்போது தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீரமைப்புத் திட்டங்கள் கைவசம்
இப்பகுதி சாலை சீரமைப்புக்கு மூன்று திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் உயர்மட்ட பாலம் அமைத்து சாலை அமைத்தல், ஏற்கனவே இருக்கும் நான்கு வழிச்சாலையை எட்டு வழிச் சாலைக்காக விரிவுப்படுத்துதல், சுரங்கப் பாதை அமைத்தல் இவற்றில் உரிய முறையைத் தேர்ந்தெடுத்து சாலைப் பணிகளை வேகமாக முடித்து விபத்துகள் கட்டுக்குள் கொண்டுவர அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.