தருமபுரி:நாடாளுமன்றத்தில் விதி எண் 377 கீழ் கேட்கப்பட்ட கோரிக்கையில் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஒகேனக்கல் மற்றும் சித்தேரி மலை கிராமத்தைச் சர்வதேச சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒகேனக்கல் பகுதியை சர்வதேச சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்க வேண்டும்:இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், “தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டின் நயாகரா என்று குறிப்பிடப்படுகிறது. ஒகேனக்கல்லை சர்வதேச சுற்றுலாத் தலமாக ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகம் அங்கீகரிக்க வேண்டும் என பலமுறை நேரிலும் கடிதம் வாயிலாகவும் கூறியுள்ளேன்.
இந்த இயற்கை அதிசயம், அதன் பரந்த காட்சிகளுடன், உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு இடமாக மாறும் திறனைக் கொண்டுள்ளது. எனவே ஒகேனக்கல்லை உலகளாவிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான நிதியை ஒதுக்குமாறு ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சகத்திடம் தற்பொழுது மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்” என கூறினார்.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்!
இதைத் தொடர்ந்து பேசிய அவர், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள சித்தேரி மலைகளின் பழங்குடி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள சுற்றுச்சூழல், சுற்றுலா, விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கு முறையான உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுடன் சுற்றுலாத் தலங்களாகச் செழித்து வளரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும், அதனால் இந்த கோரிக்கையைப் பரிசீலிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புதிய தொழில் பூங்கா:மேலும் அதகபாடி, அதியமான்கோட்டை, தடங்கம், பெலஜங்கமனஹள்ளி, ஈச்சம்பட்டி ஆகிய கிராமங்களில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்குத் தேவையான நிலங்கள் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அளவுகோல்களின்படி இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள அனுமதிகளை விரைவுபடுத்தவும், நிதியை ஒதுக்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களில் இளைஞர்களுக்கு உள்ள வேலைவாய்ப்பைப் போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கும், வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!