தர்மபுரி:பென்னாகரம் பகுதிகளில் அரசு மதுபானப்பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தர்மபுரி மாவட்டத்தின் மதுவிலக்கு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான காவல் துறையினர், தனிப்படை அமைத்து பென்னாகரம் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே பென்னாகரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், மாமியார் மருமகள் உள்பட நான்கு பேர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களது வீட்டில் திடீரென பென்னாகரம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டிக்குப் பின்புறம் தனியாக அறை அமைத்து, அதில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்துள்ளதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த அறையில் இருந்த 600க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாமியார் லட்சுமி மற்றும் மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பென்னாகரம் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டிக்கு பின்புறமாக ரகசிய அறை அமைத்து மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த மாமியார், மருமகள் இதையும் படிங்க:எமர்ஜென்சி லைட்டுக்குள் தங்கம் - விமான நிலையத்தில் பறிமுதல்