வீடு கிரையம் செய்த விவகாரத்தில் டாக்டர் குடும்பம் மீது தாக்குதல் தருமபுரி: டாக்டர் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி டாக்டர் சங்கவி தம்பதியினர் தருமபுரி நகர் குப்பாண்டி என்ற தெருவில் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் இருவரும் கிளினிக் ஒன்றை நடத்தி வருகின்றனர். 2020 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்த ராமகிருஷ்ணன் என்பவரிடம், அவரது பெயரில் இருந்த வீட்டை கிரையம் செய்து கொடுப்பதற்கு முன்பணமாக ரூ.11 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் சில மாதங்களில் சம்பந்தப்பட்ட ராமகிருஷ்ணன் இறந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இறந்த ராமகிருஷ்ணன் உறவினர்கள் நாங்கள் தான் வாரிசு எனக்கூறி டாக்டர் தம்பதிகளிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று (அக்.22) நள்ளிரவில் ஒரு கும்பல் டாக்டர் தம்பதிகளின் வீட்டுக் கதவை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வந்த டாக்டரின் தாயார் சித்ரா(50), தகராறில் ஈடுபட்ட அந்த கும்பலை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், சித்ராவை ஆயுதங்களால் தாக்கியதோடு, மேலும் பிரச்னைக்குரிய வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
இந்த தகராறில் பல் உடைந்து காயம் அடைந்த சித்ராவை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: கன்றுக் குட்டிக்காக 5 கி.மீ ஆட்டோவின் பின்னால் ஓடிய பசு.. தஞ்சையில் நிகழ்ந்த பாசப்போராட்டம்!