தருமபுரி உழவர் சந்தையை ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்! தருமபுரி: தருமபுரி நான்கு ரோடு அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தை காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் இயங்கி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடங்கள் துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார்.
உழவர் சந்தையைப் பார்வையிட்ட அவர் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மேல் கூரை இன்றி தரையில் அமர்ந்து வியாபாரம் செய்து வருவதாகவும் தங்களுக்கு மேல் கூரை அமைத்துத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர். சந்தையின் பல பகுதிகளில் அழுகிய காய்கறிகள் கொட்டப்பட்டு அசுத்தம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து உழவர் சந்தைக்குப் பொறுப்பான அதிகாரி ஏ.ஓ.இளங்கோ, எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆய்வு முடிந்து செல்லும் போது வந்தார். அவரிடம் எம்எல்ஏ உங்களது வேலை நேரம் என்ன இப்பொழுது வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், சந்தையில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:"2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை" - டிடிவி தினகரன்..!