தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி மனோ. இவர் அவரது குடும்பத்துடன் தருமபுரி நகராட்சிக்குபட்ட 3 வது வார்டு காமாட்சியம்மன் தெருவில் வசித்து வருகிறார். அதே பகுதியில் மனோவுக்கு சொந்தமான விவசாய நிலமும், அதே நிலத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பொதுக் கிணறு ஒன்றும் உள்ளது.
இந்த விவசாயக் கிணற்றை நம்பி, அப்பகுதி சுற்றுவட்டார வீடுகளுக்கான குடிநீர், கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் மீன் பண்ணை போன்றவற்றிற்கு தண்ணீருக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் கனரக வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயிலை ஊற்றி விட்டு சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் கிணற்றை பார்த்த விவசாயி மனோ, அதிர்ச்சியடைந்து நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.