தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் தருமபுரி நகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் தூய்மைப் பணி, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்டவை குறித்து நகராட்சி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
நகராட்சிக்குட்டபட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு கையுறைகள் போதுமான அளவில் உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், "நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் தண்ணீர் தேங்காத வகையில் கால்வாய்களை தூர்வார தெருக்களை பராமரிக்க வேண்டும். கிருமி நாசினி திரவங்கள் தெளிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரியும் இளைஞர்கள் பாதுகாப்பு கருதி வீடுகளிலேயே இருக்க வேண்டும். தேவையில்லாமல் வீடுகளில் இருந்து யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க:நாகையில் மருத்துவருக்கு கரோனா தொற்று!