தர்மபுரி மாவட்டத்தில் இன்று(ஜூலை.6) சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்குத் திருமண உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு 532 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "1989ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருமண நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் ரூ.5000 நிதியுதவி அளிக்கப்பட்டது. அதன்பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து ரூ.25000ஆக உயர்த்தப்பட்டது.
தாலிக்கு தங்கம் திட்டம்:
அதையடுத்து ஜெயலலிதா ஆட்சியில், இத்திட்டத்துடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டமும் சேர்க்கப்பட்டது. 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. இருப்பினும், அதற்கான நிதி சரிவர ஒதுக்கப்படவில்லை.
அதனால், கடந்த 3 ஆண்டுகளாகத் திருமண உதவித் திட்டம் பயனாளிகளைச் சென்றடையவில்லை. அவ்வாறு சுமார் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர், நிலுவை விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.