தர்மபுரி:பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைகள் அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7000 கோடி ஒதுக்கப்படும் எனவும்; அதேபோல நபார்டு மூலமாக ரூ.750 கோடியில் பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.500 கோடியும்; பராமரிப்புக்காக ரூ.400 கோடியும் என மொத்தம் ரூ.1300 கோடி பள்ளிக் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்ட கல்வி அலுவலர்களுடனான மண்டல அளவிலான இரண்டாம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு, பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, '4 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிகளுக்கு என்ன தேவை, தன்னிறைவு பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பின்தங்கிய மாவட்டத்தில் கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப்பொருட்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா? அதில் இன்னும் எவ்வளவு தேவை; அதை விரைவில் எவ்வாறு வழங்குவது என்பன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுமைப்பெண் திட்டம்-புரட்சிகரமானது:பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, ஓசூர் அருகே உள்ள தளி பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறையில் மிக முக்கியமான ஒரு திட்டமாக "புதுமைப்பெண் திட்டம்" உட்படப் பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் கற்றல் இடைவெளி உள்ள இடங்களில் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
பள்ளிகளுக்குச் சென்றால் கழிவறைகளிலேயே முதல் ஆய்வு:இவ்வாறு அரசுப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்விக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது என்பது புரட்சிகரமான ஒரு திட்டமாகும். அதேபோல, அரசுப்பள்ளிகளில் கழிவறை என்பது மிக முக்கியமானதாகும். இது குறித்து நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அறைக்குச்செல்வதற்கு முன்பாக, முதலில் கழிவறைக்கு தான் சென்று ஆய்வு செய்கின்றோம். திடீர் ஆய்வு செய்யும்பொழுது தான் உண்மை நிலவரம் தெரியும்.
ஆண்டொன்றுக்கு ரூ.1300 கோடி:மேலும், பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7000 கோடி ஒதுக்கப்படும். அதில் இந்த ஆண்டுக்கு ரூ.1300 கோடி கொடுக்கப்படும்.
18,000 வகுப்பறைகள் கட்டுவது மட்டுமல்ல. கழிவறைகள் எங்கெங்கு தேவைப்படுகிறது. அங்கு அனைத்திலும் கழிவறைகள் கட்டப்படும் சிஎஸ்ஆர் ஆக்டிவிட்டி மூலமாக, தொண்டு நிறுவனங்கள் மூலமாக நல்ல பணிகள் செய்து வருகிறோம்.