பொங்கல் பரிசில் வெல்லம் சேர்க்க வேண்டும் என வெல்லம் உரிமையாளர் கோரிக்கை தருமபுரி: பொங்கல் நெருங்கும் வேளையில், ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு (2023) பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், ஒரு முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்க்கரை வழங்குவதால் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்ல ஆலைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 50க்கும் மேற்பட்ட ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும், இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் உள்ளன. தருமபுரி கடகத்தூர் பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் வெல்ல ஆலைகளில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு உருண்டை வெல்லமாகவும், நாட்டுச் சர்க்கரையாகவும் ஏற்றுமதி ஆகிறது.
இது குறித்து ஆலை உரிமையாளர் சுகுமார் பேசுகையில், “பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஏற்கனவே வெல்லம் வழங்கியபோது, வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வெல்லத்தைதான் வழங்கினார்கள். அப்பொழுது சிறு, சிறு ஆலைகளுக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. இந்த ஆண்டு உள்ளூர் சந்தையில் இருந்து கொள்முதல் செய்து வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், இந்த ஆண்டு பரிசுத் தொகுப்பில் வெல்லம் இடம் பெறாதது ஏமாற்றமாக உள்ளது. மாவட்டத்தில் 200 ஆலைகள் இயங்கி வந்தன. ஆனால் தொழில் நளிவுற்று, இப்பொழுது 50க்கும் மேற்பட்ட ஆலைகள்தான் இயங்கி வருகின்றன. மேலும், ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அதிக அளவு உருண்டை வெல்லம் இங்கு தயாராகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது.
மேலும் வேலூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், இங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது. எனவே, அரசு உள்ளூரில் வெல்லம் கொள்முதல் செய்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்க வேண்டும்” எனக் கூறினார். முன்னதாக தஞ்சாவூர் விவசாயிகளும் ஈடிவி பாரத் செய்தி ஊடகம் வாயிலாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் வழங்க கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:களத்தில் இறங்கிய 'டாப் ஸ்டார்'.. தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம் வழங்கிய பிரசாந்த்..!