தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் பெரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், ஆறுமுகம். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தொகுப்பு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த வீடு கட்டுவதற்காக முதல்கட்டமாக 40 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின்னர் வெளி நபர்களிடம் கடன் பெற்று வீட்டைக் கட்டி முடித்துவிட்டார். வீடு கட்டுமான பணி முடிவடைந்தும் அரசு வழங்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அலுவலர்கள் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆறுமுகம் அலுவலர்களிடம் பல முறை முறையிட்டார். ஆனால் முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக கேட்டும் கிடைக்காத மன விரக்தியில், ஆறுமுகம் இன்று அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
அலுவலகத்திற்குள் வந்த ஆறுமுகம் கையில் பிளேடு வைத்திருந்தார். அந்த பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொள்வதாகக் கூறி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த அரூர் காவல் துறையினர் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொகுப்பு வீடு நிதி கோரி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு அதன் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமையிலான அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு தொகுப்பு வீடு கட்டுமான பணிக்கான நிதியினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் ஆறுமுகம் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.