தர்மபுரி அருகே பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி உள்ளிட்டப்பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
நல்லம்பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மா.சுப்பிரமணியன், 'தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி கல்லூரிப்பேராசிரியர் சதீஷ்குமார் மீது புகார் அளித்தார். கடந்த 23ஆம் தேதி பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
குழுவில் பேராசிரியை கண்மணி, பேராசிரியர் தண்டர்ஷிப், மருத்துவர் காந்தி கொண்ட குழு அமைக்கப்பட்டது. குழுவினர் விசாரித்து கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்தனர். விசாரணையின் அடிப்படையில் சதீஷ்குமாரின் அத்துமீறல் தொடர்பான தொடர்பான புகார்களைத் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து 15 நாள்கள் கால அவகாசத்துடன் சதீஷ் குமாருக்கு விளக்கம் கேட்டு துறையின் சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.
சதீஷ்குமார் 15 நாட்கள் தேவையில்லை உடனடியாக தருகிறேன் என கேள்விக்கு மறுத்து கடிதத்தை தந்தார். மாணவி கொடுத்தப்புகாரும் விசாரணை நடத்தியவர்களின் அறிக்கையும் ஒன்றாக இருப்பதால் மருத்துவப்பேராசிரியர் சதீஷ் குமார் தவறு இழைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிறது. இதனையடுத்து அவரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உதவிப்பேராசிரியர் சஸ்பெண்ட் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தற்காலிகப் பணியிடை நீக்கத்திற்குப்பிறகு துறை ரீதியான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும். மருத்துவர் பணி என்பது மக்களை காக்கும் மகத்தான பணி. இப்பணியில் தவறான காரியங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..உதவி பேராசிரியர் வேறு துறைக்கு மாற்றம்