கிருஷ்ணகிரி மாவட்டம், லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவருக்கு கடந்த 1998ஆம் ஆண்டு மாது என்பவருடன் திருமணம் நடைபெற்று, இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணமான ஆறு ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து, தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் மூலம் ராஜலட்சுமி விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது ராஜலட்சுமி கிருஷ்ணகிரியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகிறார். மாது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தனக்கும் தனது குழந்தைகள் வாழ்க்கை நடத்தவும் திருமணத்தின்போது குடும்பத்தார் வழங்கிய 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ஜீவனாம்சத்தையும் பெற்றுத் தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த பெண் அதேபோல், சமூக நலத்துறையில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் பெட்ரோல் கேனுடன் வந்தார்.
அப்போது, அவரை பரிசோனை செய்த காவல் துறையினர் பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.