தருமபுரியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, போட்டியைக் காண வந்த கோகுல்(14) எனும் பள்ளி மாணவன் மாடு முட்டியதில் உயிரிழந்தான். இது குறித்து புகார் கொடுக்க சென்ற போது அதியமான் கோட்டை காவல்துறையினர் ஏளனமாக சிரித்து, பெற்றோர்களை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இறந்த பள்ளி மாணவனின் பெற்றோர்களை சந்தித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது, "தருமபுரி அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் அடிபட்டவுடன் சிகிச்சை அளிக்க அங்கு மருத்துவக்குழு நியமனம் செய்யப்பட்டது. அதோடு மட்டுமல்ல தீயணைப்புத்துறையினர் மூலம், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த கால ஆட்சியில் சிறப்பாக செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் மருத்துவ வசதி முறையாக இல்லை, ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை, முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என இறந்த சிறுவன் கோகுலின், தந்தை சீனிவாசன் தெளிவாகக் கூறியுள்ளார்.