தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட கடகத்தூர் பகுதியில், 184 நியாய விலை கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகளில் சரிவர மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. இதுகுறித்து விற்பனையாளரிடம் முறையிட்டால், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உள்ளது என தெரிவிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல ஒப்பந்தம் செய்துள்ள லாரி உரிமையாளர் ராஜாமணி என்பவர் கூறுகையில், அனைத்து கடைகளுக்கும் மண்ணெண்ணெய் இறக்கும் போது, கூடுதலான பேரங்கள் இறக்குகிறோம். மறுநாள் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு கடைக்கு 100, 300 லிட்டர் வரை எடுக்கப்படுவதாகவும், இதனால் மாதத்திற்கு 3000 லிட்டர் வரை தட்டுப்பாடு ஏற்படுகிறது, என்றார்.