தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டி ஊராட்சி கெளாப்பாறை கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்க அருகில் உள்ள கிராமத்திற்குச் செல்கின்றனர்.
நியாய விலைக் கடையில் பொருள்கள் வாங்கும்போது பட்டியலின மக்களின் சாதி பெயரை கூறி சிலர் எங்களை உரசாதீர்கள், நீங்கள் தொட்டால் தீட்டு என அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த கெளாப்பாறை கிராம மக்கள், தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டையுடன் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.
அப்போது பேசிய அம்மக்கள், "கெளாப்பாறை கிராமத்திற்கு தனியாக நியாய விலைக் கடை பிரித்து தர வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையின் மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது பகுதி நேர கடையை ரத்து செய்ததால், மீண்டும் ஒரே கடையில் பொருள்களை வாங்கி வருகிறோம்.