தருமபுரி: காரிமங்கலம் அருகே கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து பிரசன்னாவை கடுமையாக தாக்கியதுடன், காருடன் 5.9 கிலோ தங்கம் மற்றும் பணம் 60 லட்சம் ரூபாயை கடத்திச் சென்றனர்.
இதனை அடுத்து, பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகிய இருவரும், இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து இவ்வழக்கு சம்பந்தமாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து, தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும், அனைவரும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்த நபர்களை 10 தனிப்படை போலீசார் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்தனர். இதன் முதல் கட்டமாக கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர்களான சுஜித், சரத், பிரவீன் தாஸ் ஆகிய மூவரையும் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்தோணி மற்றும் சீரியல் மேத்யூ ஆகிய இருவரையும் காவல் துறையினர் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கடத்தப்பட்ட தங்கம் 5 கிலோ 900 கிராம் தங்கம் மற்றும் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 6 நபர்களில் ஆசிப் (32), விஷ்னு (27), அக்க்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரை ஓசூரில் ரிங் ரோடு அருகே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒடிசா கேபினட் அமைச்சரான தமிழக அதிகாரி... யார் இந்த வி.கே.பாண்டியன்! ஐ.ஏ.எஸ் அதிகாரி - அரசியல்வாதி!