தர்மபுரி: தேசிய மாணவர் படை ( என்சிசி ) உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, உத்திர பிரதேசத்தை சேர்ந்த என்சிசி அதிகாரி கர்னல் கே எஸ் பதாவர், கன்னியாகுமரியில் இருந்து புதுடெல்லிக்கு சுமார் 3000 கிமீ தூரம் ஒற்றுமை சுடர் ஓட்டம் மேற்கொள்கிறார். 60 நாட்கள் தொடர் ஓட்டமாக செல்லும் கே எஸ் பதாவர், ஒற்றுமை சுடரை பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளார்.
கடந்த 20-ம் தேதி கன்னியாகுமரியில் ஓட்டத்தை தொடங்கிய அவர், பல்வேறு மாவட்டங்கள் வழியாக தர்மபுரிக்கு நேற்று (நவ 30) மாலை வந்தடைந்தார். அவருக்கு பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லுரியில் என்சிசி அதிகாரிகள், கல்லுரி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருடன் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் எஸ் யுவராஜ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி ஜெயப்பிரகாஷ், விமானப்படை வீரர்கள், கல்லூரி என்சிசி அதிகாரி டாக்டர் சீனிவாசன் மற்றும் என்சிசி மாணவர்கள் உடன் வந்தனர்.