காலபைரவா் ஜெயந்தி அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் நிரம்பிய பக்தர்கள் கூட்டம் தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 1200 ஆண்டு பழமைவாய்ந்த காலபைரவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் காலபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (டிச.5) காலை முதலே விஸ்வரூப தரிசனம், மகா கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், கோ பூஜை, நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பைரவர் திருத்தேரில் திருக்கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத்தொடர்ந்து, 108 சங்கு அபிஷேகம், சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் நடைபெற்றது. இதற்கு அடுத்த படியாக, ராஜ அலங்காரத்தில் பைரவர் சுவாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று இரவு 18 குருக்கள்களுடன் ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு 1 லட்சத்து 8 அர்ச்சனை, சத்ருசம்ஹார யாகம், 1008 கிலோ மிளகாய் யாகம் நடைபெற உள்ளது. கோயிலுக்குத் தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் சென்னை மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் கூட்டம் அலைமோதியது. 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மிகவும் புகழ்பெற்ற இந்த ஆலயத்தில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்புப் பூஜைகளைக் காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலத்தின் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
நீண்ட நாட்களாக உள்ள திருமணத் தடை நீங்க இக்கோயிலில், சாம்பல் பூசணியில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆகவே, ஏராளமான பக்தர்கள் சாம்பல் பூசணி மற்றும் தேங்காயில் தீபம் ஏற்றி காலபைரவரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோயிலில் உள்ள மகா வில்வம் மற்றும் வன்னிமரம் அருகே உள்ள இரும்பு வேலியில் பக்தர்கள் பூட்டுப் போட்டு வழிபட்டுச் செல்வது வழக்கம்.
குறிப்பாக, பழங்காலங்களில் சிவன் கோயிலை இரவில் பூட்டுப் போட்டு சாவியைக் காலபைரவர் இடம் வைத்து விட்டுச் செல்லும் வழக்கம் உள்ளதாகக் கூறப்படுவதைப் போல, காலபைரவர் காவல் தெய்வம் என்பதால் இவ்வாறு இக்கோயிலின் பூட்டுப் போட்டுவிட்டுச் செல்வதாகத் தெரியவருகிறது.
இதையும் படிங்க:முரசொலி நிலம் விவகாரம்; ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!