கடம்பூர் மலை கிராமத்தில் யானை வராமல் தடுப்பதற்காக கர்நாடகா பாணியில் பாதுகாப்பு வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர் ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்தில் மூலக்கடம்பூர், நடூர், கொளிஞ்சி, மரத்தூர், ஏரியூர், கல்கடம்பூர், பூதிக்காடு, செங்காடு, புலிபோன்காடு ஆகிய வனத்தை ஒட்டிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஒற்றை ஆண் யானை புகுந்து, சாகுபடி செய்த வாழை, மக்காச்சோளம், ராகி போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும் 10 மாதப் பயிரான வாழைகளை யானை ஒரே நாளில் முறித்து தின்கிறது. அதேபோல், முழுவதுமான பயிர்களை சேதப்படுத்துவதால், பகல் இரவு என நாள் முழுவதும் யானையை துரத்தும் பணியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட கடம்பூர் விவசாயிகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநர் கிருபா சங்கரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், “ஒற்றை யானை கிராமத்துக்குள் புகாதபடி, கர்நாடக அரசு அங்குள்ள விவசாயிகளுக்கு அமைத்துக்கொடுத்த மின்வேலியுடன் கூடிய அகழியைப் போல் ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இந்த கோரிக்கையை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கிருபா சங்கர் உறுதியளித்துள்ளார். மேலும் தற்காலிகமாக யானை ஊருக்குள் புகாதபடி வனத்துறையினர் 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுமாறு கடம்பூர் வனத்துறையினருக்கு இணைகள இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:Video: காட்டிற்குள் விரட்ட முயன்ற வனத்துறையினரை விரட்டிய யானையின் பகீர் வீடியோ!