தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட மகப்பேறு தாய்-சேய் நல கட்டடப் பணிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாய் எஜுகேஷனல் ட்ரஸ்ட் சார்பில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு வென்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா பரிசோதனை மையத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 12,462 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரியில் மட்டும் 7,363 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 8 நபர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். தருமபுரியில் கரோனா பாதிப்பு இறப்புகள் ஏதும் நிகழவில்லை. கரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.