தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முதியவர்களிடம் 5000 வரை கொடுத்தால் மட்டுமே மனுக்களை பரிந்துரை செய்வதாகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு 10 ஆயிரம் என லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், அவர்களை நீண்ட நாட்கள் அலை கழிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் கேட்டதால் ரூ.6000 பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத காலமாக அளவீடு செய்ய வராததால், அவரை பரசுராமன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்பொழுது பேசிய கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் அளவிடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.பணத்தை பெற்றுக் கொண்டு ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக் கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.